வெயில் காலங்களில் குளிர்ந்த நீரைப் பருகினால் புத்துணர்ச்சி கிடைக்கும். ஆனால் சீனாவில் இதை யாரும் ஏற்றுக்கொள்வதில்லை. வெயிலோ, மழையோ எந்தக் காலங்களிலும் சூடான நீரையே பருகுகிறார்கள். பெரும்பாலானவர்கள் வெளியே செல்லும்போது ஃப்ளாஸ்கில் சுடுதண்ணீர் எடுத்துக்கொள்கிறார்கள். தண்ணீர் தீர்ந்துவிட்டாலும்கூட ஆங்காங்கே தண்ணீர்க் குழாய்களில் வரும் சுடுநீரைப் பிடித்துக்கொள்கிறார்கள்.
குளிர்ந்த நீர் உடலுக்கு நல்லதல்ல என்ற எண்ணம் பெரும்பாலான சீனர்களிடம் இருக்கிறது. 1949-ம் ஆண்டில் கம்யூனிஸ சீனாவில் ஓர் அறிவிப்பு வெளியானது. குழாய்களில் வரும் நீர் அவ்வளவு தூய்மையாக இல்லாததால், தண்ணீரைக் காய்ச்சி, வடிகட்டி குடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. வீடுகள், அலுவலகங்கள், உணவு விடுதிகள் என எங்கும் சுடு தண்ணீர் குடிக்க ஆரம்பித்தனர். பழங்காலச் சீன மருத்துவத்திலும் சூடான நீருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது.
சூடான நீர் விரைவில் ஜீரணமாக்கும், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும், நச்சுகள் வெளியேற உதவும். குளிர்ந்த நீர் தசைப் பிடிப்பு ஏற்படுத்தும், உடல் உறுப்புகள் மெதுவாக இயங்க வைக்கும். சூடான நீரையும் குளிர்ந்த நீரையும் கலந்து பருகக்கூடாது என்கிறது சீன மருத்துவ குறிப்புகள். பழங்காலத்தில் இருந்தே புழக்கத்தில் இருக்கும் தேநீர் கலாசாரத்தில் இருந்து சுடு நீர் பருகும் பழக்கம் உருவாகியிருக்கலாம் என்று சிலர் கூறுகிறார்கள்.
சீனாவின் அண்டை நாடுகளான ஜப்பான், கொரியாவிலும் நீண்ட காலமாக தேநீர் குடிக்கும் பழக்கம் இருந்து வருகிறது. பொதுவாக சுடு தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லது என்ற எண்ணம் எல்லோரிடமும் உறுதியாக இருக்கிறது. எனவே வெளி நாடுகளுக்குச் சென்றால்கூட இந்தப் பழக்கத்தை சீனர்கள் மாற்றிக்கொள்வதில்லை.
source : Tamil Hindu
No comments:
Post a Comment